சமூகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை காட்டிலும், முதல் முறையாக மரக்கன்றை தொடுவதாக சொல்லும் இளம் தலைமுறையினர் ஏராளம்.
பிக் பாஸ்கெட் ,மில்க் பாஸ்கட் என காய்கறிகளை கை தொடாமல் சமையலறைக்கு கொண்டு சேர்க்கும் வணிக முன்னேற்றத்தினால் மண், மரம், செடி, காய், பழம் என தொட்டு உணரும் கல்வி இத் தலைமுறைக்கு எட்டாக்கனியாக மாறி நிற்கிறது.
நகர்ப்புறங்களில் உயர்தட்டு மக்கள் மட்டுமல்ல நடுத்தர மக்களிடமும் இது பரவி, பூச்சி இல்லாத காய்கறிகள், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள்,பல முறை பாலீஷ் செய்யப்பட்ட தானியங்கள் என வெறும் சக்கைகளை உணவாக வயிற்றில் நிரப்பி வரும் நாம் விவசாயம் மறந்த தலைமுறையாக மாறிவருகிறோம்.
பசுமை களப்பணிகள் மூலம் நகரங்களில் இளம் சமூகத்தை மீண்டும் பசுமை பழக செய்ய நகர்புற காடுகள் திட்டம் உதவுகிறது.
சென்னை அடையாளம் பட்டு மில்லினியம் குடியிருப்பில் 800 மரக்கன்றுகளை கொண்ட அடர்வனம் இந்தியன் ஆயில் நிறுவன பங்களிப்பில் உருவாகி வருகிறது.
மரம் வைப்பவர்கள் இலட்சங்களிலும் மரம் வளர்ப்பவர்கள் நூறுகளில் உள்ளனர்.
இந்நிலையை தனது தொடர் பசுமை திட்டங்கள் மூலம் மாற்றி வரும் எக்ஸ்னோரா அமைப்பு நலசங்கங்கள்,பொது மக்கள், குழந்தைகள் என அனைத்தும் தரப்பினரின் பங்கேற்புடன் பசுமை திட்டங்களை செயலாற்றுகிறது